tamilnadu

img

குடிமராமத்துப் பணியில் நடைபெறும் குளறுபடிகள் -சாமி.நடராஜன்

தமிழகம் முழுவதும் உள்ள பாசன ஏரிகள், குளங்கள், பாசன, வடிகால் வாய்க்கால்களில் மராமத்துப் பணிகளை மேற்கொள்ளவும், உடைந்து போன ஷட்டர்கள், மதகுகளை சரி செய்திடவும் தமிழக அரசு 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து ஏரி, குளங்களை குடிமராமத்துப் பணிகள் மூலம் செய்திட இந்த நிதி போதுமானது இல்லை. பல ஆண்டு களாக பராமரிக்கப்படாமல் உள்ள 37 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏரி, குளங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இந்த நிதி யானைப் பசிக்கு சோளப்பொரி வழங்கிய கதையாக உள்ளது. 

குடிமராமத்துப் பணியின் நோக்கம்
 

தமிழகத்தில் நம்முடைய முன்னோர்கள் சோழர் ஆட்சிக் காலம் துவங்கி கிராமங்களில் பொது பாசன ஏரிகள், குளங்களை ஆயிரக்கணக்கில் வெட்டி, அதை ஆண்டு தோறும் மழை பெய்யக் கூடிய பருவ காலத்திற்கு முன்பே அந்தந்த கிராமங்களில் உள்ள மக்களைக் கொண்டே பராமரித்து பாதுகாத்து வந்துள்ளனர். குளம் இல்லாத கோவிலே இல்லை என்கிற அளவிற்கு கோவில் உள்ள அனைத்து இடங்களிலும் பொது பயன்பாட்டிற்காக குளங்கள் வெட்டப்பட்டு அந்த குளங்களையும் முறையாக பராமரித்து வந்துள்ளனர்.  சோழர்கள் ஆட்சிக் காலத்தில் நீர்ப்பாசனம் முறைப்படுத் தப்பட்டு, நீர் நிலைகளை முறையாக பராமரித்து குடிமரா மத்துப் பணிகளும் சரிவர செய்யப்பட்டு வந்துள்ளது. அதன் பிறகு ஆங்கிலேய ஆட்சி காலத்திலும் புதிய ஏரிகள், குளங்கள், பாசன கால்வாய்கள் வெட்டி ஓரளவிற்கு இப் பணிகள் சிறப்பாக நடந்துள்ளன. இப்பணிகள் ஆண்டு தோறும் நடைபெறும் போது மழைகாலத்தில் பெய்யக் கூடிய தண்ணீரை சேமித்து வெள்ளப்பெருக்கை தடுத்து பாசனத்திற்கும், குடிநீருக்கும் பயன்படுத்துவது, ஆண்டு முழுவதும் கால்நடைகளுக்கு பயன்படுத்துவது என இந்த நீரை பயன்படுத்துவோரை கொண்டே அந்த நீர்நிலை களை செப்பனிட்ட பணிகள்தான் குடிமராமத்து பணிகள் என அழைக்கப்பட்டது. 

நிபந்தனையும் - குளறுபடிகளும்

குடிமராமத்துப் பணியை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட வாய்க்கால், ஏரி, குளம் எதுவாக இருந்தாலும் அதன் மூலம் பாசனம் பெறும் விவசாயிகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கையில் 50 சதவீதத்திற்கும் மேல் உள்ளவர்க ளை கொண்ட பாசனதாரர்கள் சங்கம் அமைக்கப்பட வேண்டும். உதாரணத்திற்கு 100 விவசாயிகள் பாசனதா ரர்கள் என்றால் 51 பேரை உறுப்பினராக கொண்ட சங்கம் அமைக்கப்பட்டு பதிவு செய்திட வேண்டும். அப்படி அமைக் கப்பட்ட பாசனதாரர் சங்கத்திடம் அதற்கான பணி வழங்கப் படும். ஒதுக்கப்படும் திட்ட நிதியில் 10 சதவீதம் பாசனதாரர்கள் சங்கம் பங்களிப்பு நிதியாக முதலில் செலுத்திட வேண்டும்.அதன் பிறகு அரசு நிதியை விடுவிக்கும். மேலும் தற்போது இவ்வாறு நடைபெறும் குடிமராமத்துப் பணிக்கு ஒதுக்கப் பட்ட நிதியில் 12.5 சதவீதம் ஜி.எஸ்.டி வரியாக செலுத்த வேண்டும். இதுபோன்ற நிபந்தனைகளை அரசு அறிவித்துள்ளது.

ஆளும் கட்சியின் தலையீடு
சட்டமன்றத்தில் முதல்வர் அறிவித்தபோது குடி மராமத்துப் பணிகளில் எள்அளவும் ஆளும் கட்சி தலையீடு இருக்காது என்றார். ஆனால் நடைமுறையில் ஆளும்கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் இடம்பெறாத பாசனதாரர்கள் சங்கமே இல்லை என்கிற அளவிற்குதான் நிலைமை உள்ளது.  உதாரணமாக திருச்சியை மையமாக கொண்ட டிவி சனுக்கு இத்திட்டத்தில் ரூ.109.88 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள் ளது. இந்த நிதி முழுவதும் பாசனதாரர்கள் சங்கம் மூலம் பயன்படுத்தப்பட வேண்டும். இந்த டிவிசனுக்கு உட்பட்ட தஞ்சை மாவட்டத்தில் 117 பணிகள் குடிமராமத்துப் பணி களுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. 117 இடத்தில் பணிகள் துவங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறி வித்துள்ளார். ஆனால் பல இடங்களில் பூஜை போட்ட தோடு பணிகள் இன்னும் துவங்கப்படவில்லை.  இந்த 117 பணிகளுக்குமான பாசனதாரர்கள் சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பானாவர்கள் ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் முக்கிய நிர்வாகிகளாக உள்ளனர். (அதாவது செக்கில் கையெழுத்திடுபவர்களாக). ஏதாவது ஒரு சில இடத்தில் ஆளும் கட்சியினர் இல்லாத பாசன தாரர்கள் சங்கம் இருந்தால் அங்கும் ஆளும் கட்சியின ருக்கு தெரியாமல் பணியை துவங்கக் கூடாது, எங்களுக்கு தர வேண்டியதை தந்துவிட்டு பணியை துவங்குங்கள் என்று தகராறு செய்யும் நிலை உள்ளது. 

ஒப்பந்ததாரர்கள் ஆர்வமின்மை

மாநில அளவில் இப்பணிகளை கண்காணிக்க மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இப்பணிகளை கண்காணிக்க ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பணிகள் நடைபெறும் இடத்திற்கு செல்கின்றனர். ஆய்வு கூட்டங்கள் நடத்துகின்றனர். ஆனால் ஆளும் கட்சியினரின் தலை யீட்டை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. மாறாக பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு கடும் நெருக்கடி களை கொடுக்கின்றனர்.  இப்பணிகளில் மதகு உடைப்பைச் சரிசெய்வது, பாசன வாய்க்கால்கள், கரைகளில் தடுப்புச் சுவர் அமைப்பது, தவிர மற்ற பணிகள் பெரும்பகுதி எந்திரங்கள் மூலமே செய்யப் படுகிறது. இதற்காக பாசனதாரர்கள் சங்கம் ஒப்பந்தக்கா ரர்களை அணுகும் போது அவர்கள் இப்பணிகளுக்கு வர ஆர்வம் காட்டுவதில்லை. ஏனென்றால் பணிகளை செய்து விட்டு அதற்கான தொகையை பெற ஆளும் கட்சியின ருக்கு கீழிருந்து மேல் வரை 20 முதல் 30 சதவீதம் கமிஷன் தர வேண்டும்.  இது தவிர அதிகாரிகளுக்கு தனியாக தர வேண்டியுள்ள தால் எங்களுக்கு கட்டுப்படியாகாது என பல ஒப்பந்ததா ரர்கள் கூறுகின்றனர். இந்த குடிமராமத்துப் பணிகள் முழு வதும் மனித உழைப்பால் மட்டும் செய்ய முடியாது என்ற அளவிற்கு நடைமுறையில் நம்முடைய நீர்நிலைகள் மாறி போய் உள்ளது ஒரு காரணமாக உள்ளது.  குடிமராமத்துப் பணிகளுக்கு ஒதுக்கிய நிதி, விவசாயி களின் வாழ்வாதாரம் கருதியும், குடிநீர்த் தேவை, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவது, மழைக் கால தண்ணீரை சேமிப்பது உள்ளிட்டவை, நடைபெற வேண்டுமானால் இத்திட்டத்தில் ஒதுக்கப்படும் நிதி எந்த அரசியல் தலையீடு மின்றி முழுக்க முழுக்க சம்பந்தப்பட்ட பாசனதாரர்கள் சங்கம் மூலமே செயல்படுத்த வேண்டும். அப்போது தான் லாபநோக்கமின்றி பணிகளை செய்யமுடியும். மேலும் அரசு கீழ்கண்ட விவசாயிகள் எதிர்பார்ப்பு கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும். 

குடிமராமத்துப் பணிகளுக்கு ஆண்டுதோறும் கூடுதலான நிதியை ஒதுக்க வேண்டும். 

சம்பந்தப்படட பாசனதாரர்கள் சங்கங்கள் மூலமே ஆளும் கட்சியின் தலையீடு இன்றி முழு பணிகளும் செய்யப்பட வேண்டும்.

இப்பணிகளுக்கு தற்போது 12.5 சதவீதம் ஜி.எஸ்.டி வரி வசூலிப்பதை ரத்து செய்து, எதிர்காலத்திலும் ஜி.எஸ்.டி வரியில்லாமல் இப்பணிகளை மேற்கொள்ள வேண்டும். 

பெரும்பகுதி பணிகளை மனித உழைப்பு மூலம் செய்திடுவதை உத்தரவாதப்படுத்த வேண்டும். 

பாசனதாரர்கள் சங்க நிர்வாகிகள் - அரசு அதிகாரிகள் கொண்ட கூட்டங்களை அடிக்கடி நடத்தி திட்டத்தை முறையாக செயல்படுத்திட முயற்சிக்க வேண்டும். 

பருவ காலங்களுக்கு முன்பாகவே பணிகளை துவங்கி முடித்திட வேண்டும்.

 கட்டுரையாளர்: மாநிலச் செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்
 

 

;